நீர் மின் நிலையத்தில், ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், மழை இல்லாத சமயங்களில், நீர் மின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்படும். அதே சமயம், நீரேற்று மின் நிலையத்தில் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர், கீழ் அணையில் இருந்து, அதிக திறன் உடைய, ‘மோட்டார் பம்ப்’ வாயிலாக மேல் அணைக்கு எடுத்து செல்லப்படும். அதை பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தி செய்யலாம்.

நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில், 14,500 மெகாவாட் திறனில், 15 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது.
நிதி நெருக்கடியில் இருப்பதால், இந்த மின் நிலையங்களை பொது – தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நீலகிரியில், 1,000 மெகா வாட் திறனில் அப்பர் பவானி நீரேற்று மின் திட்டத்தை, பொதுத்துறையை சேர்ந்த என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து, பசுமை எரிசக்தி கழகம் செயல்படுத்துகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.
மற்ற மின் நிலையங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில், மின் வாரியத்துடன் இணைந்து, நீரேற்று மின் நிலையத்தை அமைக்க, பொதுத்துறையை சேர்ந்த என்.எல்.சி., எனப்படும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்.எல்.சி., ரென்யூவபிள் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடும் நிதி நெருக்கடி காரணமாக, மின்வாரியத்தின் அனைத்து மின் திட்ட பணிகளும் கடன் வாங்கி தான் மேற்கொள்ளப்படுகின்றன. வனப்பகுதிக்குள் மின் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் இருந்து, அனுமதி பெறுவது என்பது மிகவும் சவாலானது.
அவற்றுக்கு விண்ணப்பித்தால் அனுமதி கிடைக்க, இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். இந்தச் சூழலில், மின் வாரியம் அறிவித்துள்ள நீரேற்று மின் திட்டங்களில், ஏதேனும் ஒன்றை இணைந்து செயல்படுத்த விரும்புவதாக, என்.எல்.சி., ரென்யூவபிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. அதற்கு தாமதம் செய்யாமல், அரசிடம் விரைவாக அனுமதி பெற்று, மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி., அமைக்கும் பட்சத்தில், மத்திய அரசின் அனைத்து துறைகளிடம் இருந்தும் விரைவாக அனுமதி கிடைக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் நிலைய பணிகளையும் முடிக்க முடியும். – இவ்வாறு அவர் கூறினார்.
400 மெகா வாட் – நீலகிரி, கோவை, திருநெல்வேலி, ஈரோட்டில் மின் வாரியத்துக்கு, 1,923 மெகா வாட் திறனில், 46 நீர் மின் நிலையங்களும்; கோவை காடம்பாறையில், 400 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையமும் உள்ளன.