கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை கடந்தும், இந்தப் போர் தொடர்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.

சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே, போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யா கடும் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து வருகிறார். காலக்கெடுவும் விதித்துள்ளார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பதிலுக்கு உக்ரைனும் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா முழுவதும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ரோஸ்டோவ் பகுதியில், ஒரு தொழில்துறை தளத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டார். மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே கிட்டத்தட்ட 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பது மணி நேரத் தாக்குதலின் போது, 112 உக்ரைன் ட்ரோன்களை வானிலே பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.