வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் வகையில், தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்ய அல்லது புதிய சட்டத்தை உருவாக்க ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பின் 3ஆவது மற்றும் 4ஆவது உறுப்புரைகளின்படி, மக்கள் இறைமை அதிகாரம் தேர்தல் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, இலங்கையில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ள குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள், வெளிநாடுகளில் வாழும் தங்கள் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க சட்டங்களை வகுத்துள்ளன. அதைப் போலவே இலங்கையிலும் இந்தச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தை திருத்தம் செய்ய அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்படும்.
இந்தக் குழுவில் தேர்தல்கள் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிருவாக, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொடர்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் இடம்பெறுவர் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.