மாத்தறை கபுகம பிரதேசத்தில் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனிடையே இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 76 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இதன்போது 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்தத்துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரான 48 வயதுடைய வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது அவர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிப்பிரயோகத்துக்கு ரி-56 ரக துப்பாக்கி ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திலிருந்து பல தோட்டா ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் வர்த்தகர் ஒருவர் எனவும் அவருக்கு சொந்தமான பல தனியார் பஸ்கள் மற்றும் மீன்பிடி படகுகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களுடன் குறித்த வர்த்தகருக்கு தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கமைய இந்த துப்பாக்கிப்பிரயோகம் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் தேவேந்திரமுனை ”தெஹிபாகே மல்லி”யின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டனியாய பிங்கம பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 32 வயதுடைய நபர் உயிரிழந்திருந்தார்.எவ்வாறாயினும் குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் ஹூங்கம பொலிஸில் துப்பாக்கியுடன் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
41 வயதுடைய பிங்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டிருந்தார்.தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத்துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 76 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 41 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் 43 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.