
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்ததற்கு பதிலடியாக, அந்நாட்டிடம் இருந்து ஆறு ‘பி – 81 பொசைடன்’ போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ராணுவ அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து, ‘பி – 81 பொசைடன்’ போர் விமானங்களை நம் ராணுவ அமைச்சகம் வாங்கி வருகிறது.
கடந்த 2009ல் முதற்கட்டமாக, 12 ‘பி – 81’ ரக போர் விமானங்கள் முதன்முதலாக வாங்கப்பட்டன. அடுத்ததாக, 2016ல், நான்கு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

இந்த விமானங்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணிகளுக்கு இந்த போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
கடல்சார் கண்காணிப்பு பணியில், இந்த போயிங் ரக விமானங்கள் பெரும் உதவியாக இருந்த நிலையில், மேலும் பல விமானங்களை வாங்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்தது.
இதற்காக, கடந்த 2021ல், அமெரிக்க வெளியுறவு துறையுடன், நம் நாட்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் ஆறு போர் விமானங்களை வாங்குவதற்காக 20,572 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, இந்த ஒப்பந்தம் தாமதமானது.
இந்த சிக்கலான சூழலில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா, அதை 50 சதவீதமாக நேற்று உயர்த்தியது.
இதனால், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கவும், மாற்றி அமைக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், ஆறு பி – 81 பொசைடன் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான முடிவு கடந்த 3ம் தேதி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ரூ.67,000 கோடி ராணுவ கொள்முதலுக்கு ஒப்புதல்!
நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீண்ட நேரம் இயங்கக்கூடிய ட்ரோன்கள், மலைப்பகுதியில் பொருத்தக்கூடிய ரேடார்கள், ரஷ்ய தயாரிப்பில் உருவான எஸ் – 500 ரக ஏவுகணை அமைப்புகள், சி – 17 மற்றும் சி – 130 ஜே போக்குவரத்து விமானம் போன்றவை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இலக்குகளை துல்லியமாக குறிவைக்க உதவும் கடற்படையின் பிரமோஸ் மற்றும் பராக் – 1 ஏவுகணை அமைப்புகளை பராமரிக்கவும், ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை யிலான டி.ஏ.சி., எனப்படும் ராணுவ கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.