வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள், தமிழ் மொழி கற்க, அங்கு செயல்படும் தமிழ் அமைப்புகளின் வாயிலாக, தமிழ் வழிப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
சில பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் மட்டும் கற்பிக்கப்படுகிறது. அவற்றுக்கு, தமிழக அரசு சார்பில், தமிழ் பாடப்புத்தகங்கள் இலவசமாக அனுப்பப்பட்டு வந்தன.
இந்த ஆண்டு, இன்னும் புத்தகம் வழங்கப்படவில்லை. புத்தகம் அனுப்பும்படி, வெளி மாநிலங்களில் உள்ள, தமிழ் அமைப்புகள், தமிழக அரசுக்கு, கடிதங்கள் அனுப்பி உள்ளன.
அவற்றுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழக உதவி இயக்குநர் சாமுண்டீஸ்வரி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ‘வெளிநாடு, வெளிமாநில தமிழ் பள்ளிகள், தமிழ் அமைப்புகளுக்கு, தமிழ் பாடப்புத்தகங்களின் 10 பிரதிகள் மட்டும் இலவசமாக அனுப்ப முடியும். உங்களின் கோரிக்கை குறித்து, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாடநுால் கழக அதிகாரிகள் கூறியதாவது;
ஒவ்வொரு வெளி மாநில தமிழ் அமைப்புக்கும், ஒவ்வொரு ஆண்டும், 10 முதல் 50 லட்சம் ரூபாய் வரை புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன. காகித விலையேற்றம், அச்சுக்கூலி உயர்வு உள்ளிட்டவற்றால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை குறைக்க, ஏற்கனவே பாடநுால்களின் விலை கூட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், தொடர்ந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதனால், வெளி மாநில, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு, பாடப்புத்தகங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது ஒவ்வொரு அமைப்புக்கும், வகுப்பு வாரியாக தலா 10 பிரதிகள் அனுப்ப அனுமதி பெறப்பட்டுள்ளது. – இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, வெளிமாநில தமிழ் அமைப்பினர் கூறியதாவது:
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் செல்வந்தர்கள் அல்ல. பலர், கூலி வேலைக்கு சென்று, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்.
ஆனாலும், தாய்மொழியான தமிழை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியாக, தமிழ் பள்ளிகளை நடத்துகிறோம். மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகங்களை, பல ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கியது.
தற்போது, 10 பிரதிகளுக்கு மேல் தேவைப்பட்டால், அதற்குரிய நிதியை செலுத்த வேண்டும். கூரியர் செலவை அரசு ஏற்கும் என தெரிவித்துள்ளது. இதனால், தமிழ் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. – இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக அரசின் முடிவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.