இந்தியா – சீனா இடையே இயக்கப்பட்டு வந்த நேரடி விமான சேவை கொரோனா தொற்று பரவிய 2020ல் நிறுத்தப்பட்டது. அதன் பின் அதே ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் விமான சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியாக இணைப்பு விமானங்கள் மூலம் இரு நாட்டவர்களும் பயணிக்கின்றனர்.
இது நேரம் மற்றும் பண விரயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஷாங்காய்க்கான இந்திய துாதர் பிரதிக் மாத்தூர், ‘சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவன அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் துவக்குவது குறித்து சீனா தரப்பிலும் பேச்சு நடத்தப்படுகிறது. முன்கூட்டியே இதில் முடிவு எட்டப்படலாம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்றார்.