ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைமுறையில் இருக்கும் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ‘இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளன.
அப்பிரேரணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.
அதேவேளை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனம் பெற்றிருக்கும் நிலையில், மனிதப்புதைகுழிகளுடன் தொடர்புடைய விடயங்களும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.