மஹாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்க்கிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.

இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. அதிகளவாக விர்க்ஹோலியில் திங்கட்கிழமை மட்டும் 139.5 மிமீ மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாத மழை எதிரொலியாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஆக.23ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே இருக்கும் சூழல் உள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரயில், விமான சேவைகளும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
வரலாறு காணாத மழையை சந்தித்து வருவதால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே என பல நகரங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி எங்கும் பயணிக்க வேண்டாம், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை நகர்ப்பகுதியில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்);
விர்க்ஹோலி – 194.5
சாந்தாக்ரூஸ் – 185
ஜூஹூ – 173.5
பைகுலா – 167
பாந்தரா – 157
கொலாபா – 79.8
மஹாலக்ஷ்மி – 71.9