தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் பகிர்மான கழகத்துக்குமின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. அதை விட, செலவு அதிகம் இருப்பதால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.

அதன்படி, கடந்த 2023 – 24ல் வருவாய், 98,884 கோடி ரூபாயாகவும், செலவு, 1 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. தனியாரிடம் மின் கொள்முதல் உள்ளிட்ட காரணங்களால் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க, புதிய மின் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கப்படுகிறது. இந்த கடன்களுக்கான வட்டி அதிகம் உள்ளது. வட்டிக்காக மட்டும், 2023 – 24ல், 16,440 கோடி ரூபாயும், 2022 – 23ல், 13,450 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், கடன் வாங்குவதற்கு பதில், அரசு உத்தரவாதத்துடன், 10,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்ட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டும் பணிக்கான ஏற்பாட்டளரை, அதாவது ஒப்பந்த நிறுவனத்தை நியமிக்க, தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அந்நிறுவனம், தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எவ்வளவு தொகை நிதி திரட்டலாம்; அதற்கான வட்டி உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கும். அதற்கு ஏற்ப, காப்பீட்டு நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியம் போன்றவற்றின் வாயிலாக நிதி திரட்ட, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
கடந்த, 2017ல் கடன் பத்திரங்களை வெளியிட்டு, 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. ஒரு கடன் பத்திரத்தின் முகமதிப்பு, 10 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போதும், அதே மதிப்பில் கடன் பத்திரங்களை வெளியிட்டு, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
திரட்டப்படும் நிதியை பயன்படுத்தி, அதிக வட்டி செலுத்தும் கடன்கள் அடைக்கப்படும். கடன் பத்திரம் வாங்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு பின் முதிர்வு தொகை, வட்டி வழங்கப்படும். மின் வாரியத்தின் கடனுக்கான வட்டி செலவுடன் ஒப்பிடும்போது, கடன் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி செலவு குறைவாக இருக்கும்.