மும்பையில் 4வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வரும் கனமழையால் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மும்பைக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மழை மேலும் வலுத்து வருகிறது.

மும்பை நகரம், தானோ, பால்கர், ராய்கட், ரத்னகிரி என பல பகுதிகள் வெள்ளக்காடாகின. எங்கு பார்த்தாலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருக்க மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தேங்கிய நீர் அகற்றப்படாததோடு தொடர் மழை காரணமாக வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. ஆக.15ம் தேதி முதல் ஆக.19ம் தேதி வரை 4 நாட்களில் கொட்டிய மழைக்கு மொத்தம் 21 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 12 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான விளை நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்களில் மட்டும் மும்பையில் பல பகுதிகளில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகி இருக்கிறது.
கனமழை மோனோரயில் சேவையையும் விட்டு வைக்க வில்லை. பக்தி பார்க் – செம்பூர் இடையே இயங்கி வரும் மோனோ ரயில் நடுவழியில் மின் வினியோகத்தில் தடை ஏற்படவே அதன் சேவை பாதிக்கப்பட்டது. செம்பூர் மற்றும் பக்தி பார்க் இடையே நடுவழியில் நின்றது. இந்த ரயிலில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
ரயிலில் ஏசி இயங்காததால் பலருக்கு மூச்சுத்திணறவே ஏற்பட பயணிகள் பீதி அடைந்து அலறினர். தகவல் அறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்புப் படையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர்.
கிட்டத்தட்ட பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.த ற்போது நிலைமை சீரடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறிய நிலையில், ஆச்சார்யா மற்றும் வடலா இடையே ஓடும் மற்றொரு மோனோ ரயில் நடுவழியில் நின்றது. தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அதில் இருந்த 200க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு; (மில்லிமீட்டரில்)
விர்க்ஹோலி – 223.5
சாந்தாக்ரூஸ் – 206.6
பைகுலா – 184
ஜூஹூ – 148.5
பாந்தரா – 132.5
கொலாபா – 100.2