இந்திய எல்லை பகுதிகளை, சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அது தொடர்பாக இருநாட்டு உறவும் பாதிக்கப்பட்டது. கடந்த 2020ல் ஜம்மு – காஷ்மீரின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு பின் அது மிகவும் மோசமடைந்தது.

இது தொடர்பான பேச்சில், எல்லையில் இரு நாட்டு வீரர்களும் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதனால், இந்தியா – சீனா இடையிலான உறவு மீண்டும் வலுப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பின் நடப்பாண்டு மாநாடு, சீனாவின் தியன்ஜின் நகரில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட உலக நாடுகளின் 20 தலைவர்கள் பங்கேற்பர் என சீனா தெரிவித்து உள்ளது.