மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து, சமீபத்தில் ‘வாட்ஸாப்’ வாயிலாக திருமண அழைப்பிதழ் வந்தது. அதில், ‘திருமணத்திற்கு மறக்காமல் வந்து விட வேண்டும். அன்பு தான் மகிழ்ச்சிக்கான கதவை திறந்து விடும் பிரதான சாவி’ என குறிப்பிட்டிருந்தது.

அந்த தகவலுக்கு கீழே திருமண அழைப்பிதழுக்கான பி.டி.எப்., கோப்பு இணைக்கப் பட்டு இருந்தது. தன்னையும் மதித்து இவ்வளவு சிறப்பாக திருமண அழைப்பிதழ் அனுப்பியது யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில், அரசு ஊழியர் அந்த கோப்பை ‘கிளிக்’ செய்தார்.
அவ்வளவு தான், அடுத்த விநாடியே, அவரது மொபைல் போனில் இருந்த வங்கி கணக்குகளுக்கான ரகசிய கடவு எண்கள் உள்ளிட்டவை மறுமுனையில் இருந்தவர் கைகளுக்கு சென்றது. இதை வைத்து, அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்த 1.90 லட்சம் ரூபாயை மோசடிக்காரர்கள் துடைத்து எடுத்தனர்.
இது பற்றி சைபர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் மோசடி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண அழைப்பிதழ் மோசடி தொடர்பாக கடந்த ஆண்டே மக்களுக்கு விழிப்புணர்வு தரப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர். ‘வாட்ஸாப்’ செயலியில் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் எந்தவொரு கோப்பையும் திறக்க வேண்டாம் என அவர்கள் மீண்டும் எச்சரித்தனர்.
மோசடி குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர்.