ஜம்மு – காஷ்மீரில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜம்மு – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் சேதம் அடைந்ததால் போக்குவரத்து முடங்கியது.
ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜம்மு, கிஷ்துவார், கதுவா, தோடா, அனந்த்நாக் உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டும் மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
ஜம்முவில், 24 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. முக்கிய நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
ஜம்முவில் உள்ள ஐ.ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் விடுதியில் தண்ணீர் புகுந்தது. தரைத்தளத்தில் 7 அடி உயர நீர் இருந்த நிலையில், அங்கு சிக்கியிருந்த 45 மாணவர்களை படகுகள் வாயிலாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஜனிபூர், ரூப் நகர், தலாப் தில்லு, ஜுவல் சவுக், நியூ ப்ளாட், சஞ்சய் நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஜம்மு பஸ் நிலையம் மற்றும் தாவியில் உள்ள கோவிலின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. மழை வெள்ளத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்ப ட்டன.
ஜம்மு – பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் லோகேட் மோர் பகுதியில் இருந்த பாலம், மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.
பூஞ்ச் மற்றும் ரஜவுரியை அனந்த்நாக்குடன் இணைக்கும் முகல் சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற் பட்டன.
கிஷ்துவார் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து, ராணுவ அமைச்சர் ராஜ் நாத் சிங் ஆறுதல் தெரிவித்தார்.
பாதி க்கப்பட்ட பகுதி களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என ஜம்மு – காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த ப்பட்டுள்ளனர்.