அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.கைது செய்வதற்குரிய நியாயமான காரணிகள் ஏதும் இருக்கவில்லை. இந்த கைதுக்கு அரசாங்கம் நிச்சயம் சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25.08.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.
முறையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவில்லை.நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக செயற்படும் பொலிஸாரின் பிரதான நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாகவே அமைந்தது.
வாக்குமூலம் பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.சாட்சியாளர்களுக்கு அச்சமூட்டல் அல்லது சாட்சியங்களை இல்லாதொழித்தல் போன்ற சந்தேகம் காணப்படுமாயின் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்திருக்கலாம்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறாயின் சாட்சியாளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்யும் செயற்பாடாகவே இதனை கருதுகிறோம் என்றார்.