அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்ததால் இந்திய- – அமெரிக்க உறவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இதில் 25 சதவீத வரி ஆகஸ்ட் 7ல் இருந்து அமலில் உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி அமலுக்கு வருமா? நிறுத்தி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேநேரத்தில், ரஷ்ய கச்சா எண்ணெயை தேசிய நலன் மற்றும் சந்தை விலை அடிப்படையில் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஆதரவு கோரி அந்நாட்டு எம்.பி.,க்களை அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது.