இந்திய நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி முதல் முறையாக மின்சார கார் தயாரித்துள்ளது. இ-விடாரா என்ற பெயரில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த கார்களின் அறிமுக விழா, குஜராத் மாநிலம் ஆமதாபாத் அடுத்த ஹன்சல்பூரில் இன்று நடந்தது.பிரதமர் மோடி, கொடி அசைத்து புதிய வாகனத்தின் பயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட அனைத்து முன்னேறிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். குஜராத் மாநிலத்தில் டிடிஎஸ் லித்தியம் அயன் பேட்டரி ஆலையில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு தயாரிப்பு பணியையும் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ஆலை, தோஷிபா, டென்சோ மற்றும் சுசூகி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் 80 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சக்தி ஜனநாயகம். இங்கு அதிக திறமை உடையவர்கள் உள்ளனர். இதனால் அனைத்து இக்கட்டான சூழல்களிலும் நாம் வெற்றி அடைய முடிகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார கார்கள் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு சிறப்புவாய்ந்த நாள். ஜப்பானை சேர்ந்த சுசூகி நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்தி, ஜப்பானுக்கே ஏற்றுமதி செய்ய உள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும்.
சுசூகி நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரித்து ஜப்பான், ஐரோப்பா உட்பட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியா செமி கண்டக்டர் துறையில் தனது பாய்ச்சலை தொடங்கி உள்ளது. எதிர்கால தேவைக்கு ஏற்ற தொழிலல்துறையில் இந்தியா கவனம் செலுத்தும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தி துறையில் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மொபைல் போன் உற்பத்தி துறையில் 2,700 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 200 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் சீர்திருத்தங்களை போட்டியிட்டு அமல் செய்ய வேண்டும். வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகளையும், சிறந்த நிர்வாகத்தையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ‘மேக் இன் இந்தியா’ யாத்திரையில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். உலகுக்காக உற்பத்தி செய்யுங்கள் என்பதே நமது தாரக மந்திரம். 13 ஆண்டுகளுக்கு முன் நான் குஜராத் முதல்வராக இருந்த போது மாருதி சுசூகி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கி கொடுத்தேன். மேக் இன் இந்தியா முயற்சி ஆனது உள்நாடு மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இது குறித்து சுசூகி நிறுவனம் உயர் அதிகாரி தோஷிரோ சுசூகி கூறுகையில், ”அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இந்தியாவில் சுசூகி மோட்டார் நிறுவனம் 70 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது, என்றார்.