
கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுளது. நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் வரிவிதிப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கொலம்பிய குடியேறிகளை கொண்ட இரண்டு விமானங்களை, கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து கொலம்பியா மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோ நாடு கடத்தப்படும் குடியேறிகளை பொது மக்கள் போக்குவரத்துக்கான விமானங்கள் மூலமே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்த நிபந்தனைகளை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ள அவர், அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர்களை அழைத்து வர ஒப்புக் கொண்டுள்ளார் எந்தவித கட்டுப்பாடும் தாமதமும் இல்லாமல் அவர்களை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் குடிமக்களின் கண்ணியம் காக்க”, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும் என்று கொலம்பியா தெரிவித்துள்ளது.
சமூக ஊடக பக்கங்களில் இரு நாட்டு தலைவர்களும் மாறிமாறி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் அதிபர் டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்கா கருதுகிறது.
டிரம்ப் உத்தரவைக் கண்டித்து அதிபர் பெத்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவிட்ட சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில் இருந்த “முட்டுக்கட்டை கடக்கப்பட்டது” என்று கொலம்பிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா இந்த ஒப்பந்தத்தின்படி நடக்காவிட்டால், முழுமையான வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பகிரவும்: