
இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஸவுக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக, பெலிஅத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஸவை ஜனவரி 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முறைகேடான விதத்தில் சேர்த்ததாகக் கூறப்படும் பணத்தின் ஊடாக கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானை பகுதியில் 34 மில்லியன் ரூபாவிற்கு காணி மற்றும் வீடொன்றை கொள்வனவு செய்ததாக யோஷித்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
தன்படி, நிதி சலவை தவிர்ப்பு சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
நிதி சலவை தவிர்ப்பு சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளமைக்கான போதியளவு சாட்சியங்கள் உள்ளமை குறித்து சட்ட மாஅதிபரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க கூறுகின்றார்.
பகிரவும்: