
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சனிக்கிழமை மாலை லாஸ் வேகாஸில் இருந்து மயாமிக்கு பயணம் செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்த விமானத்தில் உள்ள தொலைக்காட்சி திரைகளில், சிஎன்என்-க்குப் பதிலாக மீண்டும் ஃபாக்ஸ் நியூஸ் திரையிடப்பட்டது.
அமெரிக்காவின் அரசாங்கம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நம்பிக்கையுடன் காணப்பட்டார் அதிபர் டிரம்ப்.
பிபிசியின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், “செய்யப்பட்ட வேலைகள் மற்றும் வேலையின் அளவுகளுக்காக முதல் தர மதிப்பீடுகளைப் பெறுகிறோம்” என்று கூறினார்.
“ஒரு அதிபரை எல்லாரும் நினைவில் வைத்திருக்கக் கூடிய அளவில், மிகவும் வெற்றிகரமான முதல் வாரம் இது என மக்கள் கூறுகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, அரசு நிறுவனங்களில் உள்ள பல சுயாதீன கண்காணிப்புக் குழுக்களை நள்ளிரவில் திடீரென நீக்கியதாக, பத்திரிகையாளர்களுடனான 20 நிமிட உரையாடலின் போது ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
அவர் வேறு சில தகவல்களையும் பகிர்ந்தார். அவற்றுள் ஒன்றாக, “கிரீன்லாந்தை அமெரிக்கா பெறும்” என்று தான் நினைப்பதாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அதிக பாலத்தீனர்களுக்கு தஞ்சம் அளிக்க எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு அழைப்பு விடுத்தார் டிரம்ப்.
மறுபுறம், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் “தாராளவாதி” என்றாலும் கூட அவருடன் “மிகவும் நல்ல உறவை” கொண்டிருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார் .
ஜோ பைடன் ஆட்சியில், இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு அரிதாகவே நடக்கும். அதிபராக பதவியேற்ற ஆறே நாட்களில் வாஷிங்டன் மற்றும் அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதற்கான சமிக்ஞை இது.
பகிரவும்: