குருதிச் சுவடுகள்..

மேஜர் சுசி மாமா
பரமநாதன் சிதம்பரநாதன்
1ம் படிவம், பாவற்குளம், வவுனியா
வீரப்பிறப்பு: 18.04.1964
வீரச்சாவு: 28.08.1991 பாவற்குளம் ஆவரம்துலா பகுதியில்வில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
சுசி மாமா என்றால், வவுனியா மாவட்டத்தில் அறியாதவர்கள் எவருமே இல்லை. அந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ் வொருவருக்குமே அவன் மாமாதான். அவர்கள் அனைவருமே அவனை விரும்பினார்கள். அந்த மண்ணின் இளைய வாரிசுகள் தான், சுசியாக இருந்தவனை சுசி மாமாவாக மாற்றிவிட்டார்கள்.
பாவற்குளம்தான் சுசி மாமா பிறந்து வளர்ந்த கிராமம். தமிழீழத்தின் எல்லைக ளைத் தன் இருகைகளையும் நீட்டி வரையறுத்துக் கொண்டிருக்கும் பாவற்குளத்தையும், அதன் முன்பாக அதையே நம்பியிருக்கும் கிராமத்தையும், வயல் வெளிகளையும், அந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன்னைவிட அதிகமாக நேசித்தான்; சுசியும் அவர்களைப் போலத்தான், அந்த மண்ணுடன் தன்னை இறுகப் பிணைத்திருந்தான்.
பாவற்குளத்திற்கு அருகில் அதனை ஒட்டிக்கொண்டே இராசேந்திரங்குளம் எனும் கிராமம் உள்ளது. டேவிட் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன். சிறுவயதிலேயே டேவிட்டும் சுசியும் நண்பர்களாகிவிட்டார்கள். பள்ளிக்கூட வகுப்பறை ஒன்றில் முதன் முதலாக ஒருவரையொருவர் கண்டுகொண் டார்கள். மிக விரைவிலேயே அவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள். அந்த வயதிலேயே ஓர் புரிந்துணர்வு; உண்மையான அன்பை – பாசத்தைத் தங்கள் நெஞ்சங்களில் அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். ஒருவனை ஒரு நாளேனும் காணாவிடில் மற்றவன் சோர்ந்து விடுவான்; கலங்கி விடுவான்.
அவர்கள் வாழ்ந்த கிராமங்களின் எல்லையிடப்படாத வயல் வெளிகளும், வாய்க் கால்களில் பாய்ந்தோடும் குளத்துத் தண்ணீரும், காட்டின் கரைகளும் அந்த நண்பர்களின் அன்பை வளர்த்தன; உரமூட்டி உறுதி சேர்த்தன. அவர்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் மிகவும் அன்பு வைத்திருந்தனர். அதைப் போலத்தான் அந்த மண்ணில், அந்த வயல் வெளிகளில், காட்டுத் தரைகளில், ஏன் எல்லாவற்றிலுமே அவர்கள் மிகவும் பற்று வைத்திருந்தனர்.
எல்லைப்புறத் தமிழ்க் கிராமங்கள் அனைத்திலும் நடந்தமாதிரியே பாவற்குளத்திலும் நடந்தது. முதலில் சில சிங்களவர்கள் வயற் கரையோரங்களில், காட்டுக் கரைகளில் குடிவந்தனர். பின்பு அகலக் கால்களை வைக்கத் தொடங்கினர். காடு ஒரு பக்கமாக அழிக்கப்படத் தொடங்கியது. மறு பக்கமாகத் தமிழர் கிராமங்கள் அபகரிக்கப்படத் தொடங்கின. குடியேற்றத்தின் மூலம் சிங்களச் சனத்தொகை அதிகரிக்கத் தொடங்கியது.
காலப்போக்கில் சிங்களக் காடையர்களின் அடாவடித் தனங்கள் அதிகரித்தன. தமிழர்களுடனான சில கலகங்கள் வந்தன. தமிழர்கள் கடுமையாக எதிர்த்த பொழுதெல்லாம் சிங்களக் காடையர்களுக்குத் துணையாக, சிறீலங்காவின் காவற்துறையும் வந்தது. வலுவற்றவர்களின் எதிர்ப்பு கொடிய ஆயுதங்களுக்கு முன் என்ன செய்ய முடியும்?
பாவற்குளத்தைச் சுற்றி சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் புதிது புதிதாக எழுந்து கொண்டிருந்தன. சிங்கள அரசு இயந்திரம் கொடிக்கணக்கான பணத்தைக் கொட்டித் தமிழர் நிலங்களில் சிங்களவர்களைக் குடி யமர்த்திக்கொண்டிருந்தது.
சிங்களவர்களின் ஆக்கிரமிப்பும், இராணுவ அடக்குமுறையும் அந்தப் பகுதி எங்கும் தலை விரித்தாடின. சுசியும் டேவிட்டும் இப்போது இளைஞர்களாக இருந்தார்கள். அதற்குள் தான் அந்த எல்லையோரப் பகுதியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. பாவற்குளத்தில் சிங்களப் பாடசாலை ஒன்று – இருந்தது. சிங்கள அரசின் நிர்வாக அதிகாரிகள் இருந்தனர். பாவற்குளத்தின் நீர்ப்பங்கில் பெருமளவு, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. எது எப்படியோ, அந்த எல்லையோரத் தமிழ்க் கிராமங்களில் அமைதி அழிக்கப்பட்டிருந்தது.
“எங்கள் மண் மீட்கப்பட வேண்டும்’ — இந்த நினைவே அங்கு வாழ்ந்த அனைவரின் நெஞ்சிலும் பற்றிக் கொண்டது. சுசி மாமா தான் முதலில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டான். இரகசியமாக இயங்கிய அந்த நேரத்து இயக்க நடைமுறையின் படி, அவன் டேவிட்டுக்குச் சொல்லாமல் – அவனுக்குத் தெரியப்படுத்தாமலேயே – சென்றுவிட்டான்.
டேவிட் தனித்துப் போனான். அவனுக்கு எல்லாமே வெறுமையாக இருந்தது. அவர்கள் சேர்ந்து திரிந்த வயல் வெளிகள், கிராமத்து வீதிகள், வாய்க்கால் தண்ணீர் எல்லாமே அவனுக்கு வெறுமையாகத் தெரிந்தன. ஆனால் அதுவே அவனில் ஒரு புதிய சிந்தனையோட்டத்தை வளர்த்தது.
‘எங்கட கிராமம் மீட்கப்பட வேண்டும்.
அது ஒரு தனி மனிதனின் உணர்வுதான். ஆனால் அது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனாகவும் இருந்தது; தாயகத்தின் நலனாகவும் இருந்தது. சில நாட்களின் பின்பு டேவிட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டான்.
அந்த நேரங்களில் தான்
பாவற்குளம், இராசேந்திரங்குளம் உட்பட அதன் அயற் கிராமங்கள் அனைத்தி லிருந்தும், தமிழர்கள் ஆயுத முனையில் அடித்து விரட்டப்பட்டனர். எதை எடுப்பது? எதை விட்டுச் செல்வது? – தங்கள் இதயங்களை, நினைவுகளை விட்டு விட்டு வெறும் மனிதக் கூடுகள் இடம் பெயர்ந்தன.
சுசி மாமாவின் தந்தை நாட்டுப் பற்று நிறைந்த மனிதர்; அந்த மனிதரும் அவரைப் போல இன்னும் சிலரும் தங்கள் வாழ்விடத்தை விட்டு விலக விருப்பமின்றி, அந்த மண்ணிலேயே தொடர்ந்து நின்றார்கள். ஆனால், ஓர் இரவில் சுற்றி வளைத்த சிங்களத் துப்பாக்கிகள் அந்த மனிதர்களை இரக்கமற்றுக் கொன்றன. சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்புக்குத் தடையாக நின்ற அந்த மனிதர்கள், அரச படைகளால் அழிக்கப்பட்டனர்.
காலங்கள் சென்றன. வவுனியா மாவட்டத்தில் வெடியோசை எங்கு கேட்டாலும் அங்கு மாமா நிற்பான்; அருகிலேயே டேவிட்டும் நிற்பான். எல்லாச் சண்டைக்களங்களிலுமே இருவரின் துப்பாக்கிகளும் இலக்குத் தவறாமல் எதிரிகளை விழுத்தின. அவர்கள் சில நேரங்களில் ஆட்கள் அற்றுப் போன தங்கள் கிராமங்களிலும் அலைந்தனர். ஆனால் இப்போது, அவர்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன; துணைக்குத் தோழர்கள் இருந்தனர்.
சுசி மாமா அனைத்துத் தோழர்களின் மனதிலும் மிக விரைவிலேயே இடம்பிடித்துக் கொண்டான். ‘சுசி மாமா நிற்கிறான்’அந்த நினைவே அவன் தோழர்களுக்கு ஓர் ஆன்ம பலத்தைக் கொடுத்தது. சண்டைக் களங்களில் அசையாத உறுதியுடன் நின்று கொண்டு, மிக இலகுவான செயல் ஒன்றைச் செய்பவன் போன்று வழி நடத்தும் அவனைப் பார்க்க, வியப்பாக இருக்கும். ஒரு முறை சண்டைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்; இன்னும் சில மணி நேரங்களில் குருமன் காட்டில் இராணுவக் காவலரண் ஒன்று இல்லாமற் போகும் இந்த மண்ணின் விடிவிற்குப் போராடத் தேவையான ஆயுதங்கள் எங்கள் கைகளில் தவழும். ஆனால் அந்த நேரத்தில் ‘சுசி மாமாவின் அம்மா இறந்துவிட்டாள்’ என்ற செய்தி கிடைக்கிறது.
ஒருபுறம் தன்னை இந்த மண்ணிற்குத் தந்து அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த அம்மா அவனுக்காக எரியாமற் காத்துக் கிடந்தாள்.
மறுபுறம், இந்த மண்ணின் வாழ் விற்குத் தேவையான ஆயுதங்கள்
டேவிட்டுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. அசைவற்றுப்போய் ஒரு மரத்துடன் இருந்துவிட்டான். சுசி மாமாவோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அன்று குருமன் காட்டில் இராணுவக் காவலரண் ஒன்று சிதறியது. ஆயுதங்கள் புலிகளின் கைகளில் அதன் பின்பே , மாமா தன் தாயின் உடலைப் பார்க்கப் போனான். ஒரு புலி வீரன் தாயைவிட தாய்நிலத்தை அதிகமாக நேசிக்கிறான் என்பதற்கு, மாமா ஒரு விளக்கமாக நின்றான்.அன்று ,
சுசி மாமாவும் டேவிட்டும் வேறு வேறு இடங்களில் நின்றனர்; காலை நேரம்.
“இண்டைக்கு எங்கட ஊருக்குப் போறன்” என்று, டேவிட்டுக்கு மாமா ‘வோக்கி ரோக்கி’ யில் அறிவித்தான். அவர்கள் நெடுகவும் போய்வந்த எதிரிகளைச் சந்தித்துச் சண்டையிட்ட இடங்கள் தான். ஆனால் டேவிட் அதைப்பற்றிப் பெரிதாக எண்ணவில்லை .
‘சரி போயிட்டு வா. வந்து விசயங்களைச் சொல்லு’ ‘ என்றான்.
மாமாவும் அவனது தோழர்களும் பாவற்குளம் கிராமத்திற்குள் கால் வைத்தார்கள்’ அந்த மண்ணில் மிதித்ததுமே அவன் புது வேகம் வந்தது போல உற்சாகமாய் இருந்தான்
சிறு வயது தொடக்கம் அவன் பழகிய மரங்களும், மேடுகளும் பள்ளங்களும் அவனுக்கு இப்போது வழி சொல்லின. அவர்கள் நடந்தார்கள். தமிழர்களின் குடியிருப்புகள் அழிந்து போய், புதர் மண்டிப்போய்க் கிடந்தன. தூரத்தில் – தமிழர் நிலங்களில் நின்ற சிங்களவர்களின் கல் வீடுகளும், பாடசாலைகளும் தெளிவாகத் தெரிந்தன.
ஒரு மண் மேட்டின் மேல் மாமா நின்றான். முன்னால் மாமரம் ஒன்று சிதைந்து போன நிலையிலும், இன்னமும் உயிர்ப்புடன் நின்றது.
”இதுதான் என்ர வீடு. இந்த வீட்டுக்குள் தான் நான் சின்னவனாகத் தவழ்ந்ததும், பெரியவனாக வளர்ந்ததும்.”
சுசி மாமாவின் வார்த்தைகள் அவனது கிராமத்தின் காற்றில் கலக்கும் முன்னமே பற்றைகள் எங்கும் பதுங்கியிருந்த இராணுவ வெறியர்களின் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கின.
அவர்கள் நிலை எடுப்பதற்கு முன்பே மாமாவிற்குச் சூடு விழுந்தது. அவன் பிறந்து வளர்ந்த வீட்டின் மடியிலேயே, அவனது தந்தை மாதிரியே அவனும் உயிரற்று விழுந்தான். அடுத்தது குமாருக்கு . எஞ்சி நின்ற தோழர்களின் துப்பாக்கிகள் எதிரிகளை நோக்கி இயங்கின. அவர்கள் ஐந்து பேர்தான் நின்றார்கள். எதிரிகளிலோ பலர் இருந்தனர். ஆனாலும் மாமாவையும் குமாரையும் தூக்கிக்கொண்டே மற்றைய தோழர்கள் பின்வாங்கி வந்தார்கள்.
சண்டைக்குச் சென்ற தோழர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள், அவர்களின் தோள்களில் இருவர். முகாமில் இருந்த அனைத்துத் தோழர்களும் எழுந்து ஓடினார்கள். நெஞ்சத்தில் இனந்தெரியாத தவிப்பு யார்…? டேவிட்டும் ஓடினான்.
சுசி மாமாவின் உடல் அவனால் தாங்க முடியவில்லை ; நம்பவும் முடிய வில்லை அழுதான்; இயன்றவரை அழுதான். வளர்ந்தவன் தான் நீண்ட போராட்ட வாழ்வில் அடிக்கடி இழப்புக்களைச் சந்தித்தவன் தான். ஆனாலும் கண்ணீர் அவனுக்குக் கட்டடுப்பட மறுத்தது. டேவிட் மட்டுமல்ல எல்லாத் தோழர்களுமே. ஏன் அந்த மண்ணே அன்று கண்ணீரால் நனைந்து போனது.
சுசி மாமாவின் பிரிவைத் தாங்க முடியாமல் டேவிட் தவித்தான். அவனுக்குக் கிராமத்திற்குப் போகவேண்டும் போல் இருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து திரிந்த வயல் வெளிகள், முன்பொரு காலத்தில் தண்ணீர் புரண்டு பாய்ந்த வாய்க்கால்கள், தற்போது இராணுவ முகாமாய் மாறியிருக்கும் பாடசாலை எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் போலவும் இருந்தது.
‘சுசி மாமாவின் இழப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், எங்காவது இராணுவத்தினருக்கு நல்ல தொரு அடி கொடுக்கவேணும்.
அவன் முடிவெடுத்துக் கொண்டான். நீண்ட காலமாகத் தான் பாதுகாத்து வைத்திருந்த சுசி மாமாவின் படத்தைத் தன்
தோழன் ஒருவனிடம் கொடுத்தான். அந்தப் படம் எப்பவோ நீண்ட நாட்களுக்கு முன்பு எடுத்தது. ஆனாலும் சுசி மாமா அதில் தெளிவாக இருந்தான்.
” இந்தப் படத்தைப் பெரிசாக்கி சுசிக்குச் சுவரொட்டி அடியுங்கோ . ”
அவன் சொல்லி விட்டு ஏதோ சிந்தனையில் சிறிது நேரம் இருந்தான்.ஆனா இதைப் பார்க்கிறதிற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை . ”
அவன் சிரிக்க முயன்று தோற்றுப்போய்த் திரும்பி நடந்தான்.
டேவிட் தன் தோழர்களுடன் சண்டைக்குப் புறப்பட்டான். சிப்பிக்குளம் – சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இன்னெரு தமிழ்க் கிராமம். சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக மீண்டும் ஒர் சண்டை இப்போது டேவிட்டின் தலைமையில் நடந்தது.
அந்தச் சண்டையின் பின்பு – தோழர்கள் முகாமிற்குத் திரும்பிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கைகளில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இருந்தன.
ஆனால், அவர்களில் ஒருவன் டேவிட்டின் உடலையும் சுமந்து வந்தான்.
– விடுதலைப் புலிகள் குரல் – 29
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”