டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதில் ஒன்று பிற நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவி தொடர்பானது.
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மறுஆய்வு செய்யப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
டொனால்ட் டிரம்பின் இந்த முடிவு இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் உட்பட பல நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க ஏஜென்ஸி (USAID) வங்கதேசத்திற்கு உதவிகளை வழங்குகிறது.
அந்த ஏஜென்ஸி வங்கதேசத்திற்கான அனைத்து வகையான உதவிகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளது. தனது திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு கூட்டாளியையும் தங்கள் வேலையை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை யுஎஸ்ஏஐடி (USAID) தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளது.