
‘பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி’ என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி’ என்ற தொனிப்பொருளில் சீனாவில் ஆகஸ்ட் 31 – செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மாநாடொன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகில் பலவந்த நாடுகள் பலவும் பங்கேற்றன.
அத்தோடு 10 நாடுகள் அந்த மாநாட்டில் நிரந்தர அங்கத்துவத்தையும் பெற்றுள்ளன. அத்தோடு 25 நாடுகள் பேச்சாளராகவும் பங்கேற்கின்றன. 1999இல் இந்த மாநாடு ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்று வருகிறது.
ஆனால் இம்முறை இலங்கையில் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை நிராகரித்துள்ளதாக லங்கா கார்டியன் இணையதளம் தெரிவித்துள்ளது.
வெளியக அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த மாநாட்டை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகமும், பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகமும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரமில்லாததால் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அழைப்பு கிடைக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அதனை வெளிவிவகார அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் விவகாரங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் அரசாங்க பேச்சாளர் அறிவார். இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் அனைத்தும் இதில் பங்கேற்றன.
இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன? இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது அப்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அமெரிக்க ஆதரவாளர்கள் என விமர்சித்தனர்.
வல்லரசுகள் கூறுவதற்கமையவே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் விமர்சித்தனர். ஆனால் அந்த அரசாங்கங்கள் அனைத்தும் இவ்வாறான மாநாடுகளை புறக்கணிக்காது அவற்றில் பங்கேற்று நாட்டுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தன. யாரும் அமெரிக்காவுக்கு பயந்து எந்தவொரு மாநாட்டிலும் பங்கேற்றாமல் இருக்கவில்லை.
அவ்வாறெனில் அநுர அரசாங்கம் ஏன் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை? சீனாவைப் போன்று ஒரு கட்சி ஆட்சியை அங்கீகரிக்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வாவின் கட்சி அமைத்துள்ள அரசாங்கத்திலுள்ளோர் இதனைப் புறக்கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதே தற்போது கிடைத்துள்ள தகவலாகும். ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்வதை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர அவர் நேரமற்ற வகையில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
ஜனாதிபதிக்கு செல்ல முடியாவிட்டால் வெளிவிவாகார அமைச்சர் அல்லது வேறு அமைச்சர்கள் பங்கேற்றிருக்க முடியுமல்லவா? அல்லது குறைந்தபட்சம் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரையாவது பங்குமற்றுமாறு ஆலோசனை வழங்கியிருக்கலாமல்லவா? அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து இவர்கள் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இதேபோன்று தான் இவர்கள் பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்தனர்.
இவர்களது வெளிநாட்டு கொள்கை என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்திடுகின்றனர். ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை.
மறுபுறம் ரஷ்யர்களுக்கு இலவச வீசாவை வழங்குகின்றனர். அதிகாரத்துக்கு வர முன்னர் அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இன்று அந்நாட்டின் சகாக்களாகியுள்ளனர். இது ஜே.வி.பி.க்கு பாதிப்பல்ல, ஆனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பாகும் என்றார்.