“மன்னார் மக்களின் சம்மதம் இல்லாமல் காற்றாலை திட்டத்தை செயல்படுத்த முடியாது.” – நான் எப்போதும் மக்கள் பக்கம் இருப்பேன் – துரைராசா ரவிகரன்

மன்னார்

உலகளவில் பரப்புங்கள்

மன்னார் மக்களின் அனுமதியின்றி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தவிடயத்தில் தாம் எம்போதும் மன்னார் மக்களின் பக்கமே செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் கடந்த மாதம் 13ஆம் திகதியன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் மற்றும் மன்னார் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பில் உரியதரப்பினர் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இக்காற்றாலைத் திட்டம்தொடர்பில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தோடு அதுவரை ஒருமாதகாலத்திற்கு குறித்த காற்றாலைத் திட்டத்தினை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னார் மக்களுக்கு குறித்த காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

குறிப்பாக மன்னார்த்தீவில் இக் காற்றாலைத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள சாந்திபுரம், தாழ்வுபாடு, தோட்டவெளி, ஓலைத்தொடுவாய், பேசாலை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தலை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டு, தெளிவுபடுத்தல் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் முதலாவது தெளிவுபடுத்தல் கலந்துரையாடலானது மன்னார் சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மக்கள் இந்தக் காற்றாலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

மக்களின் அனுமதியில்லாமல், மக்களின் ஒத்துழைப்புக்களில்லாமல், மக்களை எதிர்த்துக்கொண்டு இந்தக் காற்றாலைத் திட்டத்தை மன்னாரில் அமுல்படுத்த முடியாது.

இந்த விடயத்தில் நான் எப்போதும் மன்னார் மக்களின் பக்கம்தான் இருப்பேன் – என்றார்.

உலகளவில் பரப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்