‘சைபர் குற்றவாளி களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தருவதாக, சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போல நடித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என, மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் எச்சரித்து உள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அபராத தொகையை, ‘பரிவாஹன்’ என்ற இணையதளத்தில் செலுத்தும் வசதி உள்ளது.
இதை, சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், பரிவாஹன் போல போலி செயலியை உருவாக்கி, அதன் வாயிலாக ஓ.டி.பி., எண்களை பெற்று, பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள், அபராத தொகை செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் போலீசாரின் உதவியை நாட வேண்டும். அதிகாரப்பூர்வமான இணையதளம், செயலி வாயிலாக மட்டுமே அபரா தத்தை செலுத்த வேண்டும்.
சைபர் குற்றவாளிகள், தற்போது புதிய தந்திரத்தை கையாள்கின்றனர். ஏற்கனவே, ஏதோ ஒரு சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், புகார் அளிக்க உதவியை நாடும் போது, தங்களை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் போல காட்டி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சைபர் குற்றவாளிகளிடம் இழந்த பணத்தை மீட்க, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி, பணம் வசூலித்தும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக ‘1930’ என்ற எண்ணை தொடர்பு கொண்டும், www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம். – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.