மேற்காசிய நாடான இஸ்ரேல், காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. கடந்த, 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை துவங்கியது.பிணைக் கைதிகளில் பலர் இறந்து விட்டனர்; பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 47 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிப்போம் என்று கூறி இஸ்ரேல் ராணுவம், கடந்த சில நாட்களாக காசாவில் தரைவழி தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 47 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் படங்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு பிணைக் கைதிக்கும் 1986ல் பிடிபட்டு கொல்லப்பட்ட இஸ்ரேலிய விமானப்படை அதிகாரியான ‘ரான் ஆராட்’ என்று பெயரிடப்பட்டு, அதனுடன், ஒரு எண்ணும் வழங்கப் பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கும், எதிர்ப்பை மீறி காசாவை கைப் பற்றும் நோக்கில் படை யெடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலின் ஒவ்வொரு நடவடிக்கையும் , உயிருடனோ அல்லது இறந்த பிணைக் கைதியையோ பெற முடியாத அளவுக்கு இருப்பதாக ஹமாஸ் பயங்கரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் தலைவிதி, ரான் ஆராட் போலவே இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.