”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

பத்தனம்திட்டா,

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

‘மாஸ்டர் பிளான்’ எனவே, பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் மாஸ்டர் பிளானை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்காக அமைக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 75ம் ஆண்டு விழாவையொட்டி, பம்பா நதிக்கரையில் சர்வதேச அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதை துவக்கி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

உலகம் முழுதும் உள்ள அய்யப்ப பக்தர்களை ஈர்க்கும் வகையில் சபரிமலையில் வளர்ச்சி பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சபரிமலை, பம்பா, நிலக்கல் பகுதிகளில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த, ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் சபரி ரயில்வே, சபரிமலை விமான நிலையம், ரோப் கார் என நீள்கின்றன.

வளர்ச்சி பணி அதன்படி மூன்று கட்டங்களாக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2039 வரையிலான வளர்ச்சி திட்டங்களுக்கு 778.17 கோடி ரூபாய் செலவிடப்படும். பம்பாவை முக்கிய முகாமாக மாற்றுவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2033க்குள் இரண்டு கட்டங்களாக அங்கு வளர்ச்சி பணிகளை முடிக்க தி ட்டமிடப்பட்டுள்ளது.

சன்னிதானம், பம்பா மற்றும் மலைப்பாதையில் வளர்ச்சி பணிகளுக்காக மொத்தம் 1,033.62 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர, சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்துக்காக கூடுதலாக 314.96 கோடி ரூபாய் செலவாகும். – இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *