MV X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது.

கொழும்பு,

கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த கடல்பகுதியில் மூழ்கிய எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டை வழங்க சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ் (Shmuel Yoscovits ), ஒரு நேர்காணலில், இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவது உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய பெரும் தொகையைச் செலுத்துவது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஒரு “ஆபத்தான முன்னுதாரணத்தை” ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கொள்கலன் கப்பலான எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள், 2021ஆம் ஆண்டு மே மாதம் கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப் பிடித்து எரிந்ததையடுத்து கடலில் மூழ்கியது.

நைட்ரிக் அமிலக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து, சுமார் இரண்டு வாரங்கள் நீடித்தது. பின்னர் குறித்த கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் மூழ்கியது. இந்த விபத்து இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான கடல்சார் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுத்தது. 

இந்த மறுப்பு, இலங்கை அரசாங்கத்திற்கும், கப்பல் நிறுவனத்திற்கும் இடையிலான சட்ட மற்றும் இராஜதந்திர சிக்கல்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *