அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா?
டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு” என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிடவில்லை.
இந்த செயலி குறித்த கவலைகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அமைச்சர் ஹுசிக், தரவு மற்றும் தனியுரிமை மேலாண்மை உட்பட பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என, ஏபிசி செய்தியிடம் கூறினார்.
எனினும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இதுவரை அத்தகைய எச்சரிக்கையைக் வெளிப்படுத்தவில்லை.
டீப் சீக் செயலியை இந்த இரண்டு நாடுகளிலும் 3 மில்லியன் பேர் டவுண்லோடு செய்திருப்பதாக டிஜிட்டல் சந்தை ஆய்வுத் தளமான சென்சார் டவர் கூறுகிறது.
சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகள் காரணமாக அமெரிக்க கடற்படை அதன் உறுப்பினர்கள் டீப்சீக் செயலிகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.