
கிரீன்லாந்து நாட்டை அமெரிக்கா வாங்க வேண்டும், பனாமா நாட்டுக்கு கொடுத்த பனாமா கால்வாயை அமெரிக்கா மீட்க வேண்டும், கனடா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க வேண்டும் என பேசி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது காஸாவை அமெரிக்கா ‘கட்டுப்படுத்த’ விரும்புவதாக கூறியிருக்கிறார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அருகில் வைத்துக்கொண்டே இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டிரம்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் அந்நாட்டுக்கு பயணம் செய்த முதல் வெளிநாட்டுத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவார்.
இந்த சந்திப்புக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பைடன் ஆட்சியில் இருந்த 4 ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் வலிமை அடைய அனுமதித்தார் என்று குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான பிணைப்பை தகர்க்க முடியாது என்றார்.
பாலத்தீனர்கள் பற்றிய பேசிய டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான் பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்வதாக கூறினார். ஆனால், அவரின் இந்த கூற்றுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.
காஸா ‘அழிவின் தலமாக’ இருப்பதாக தெரிவித்த அவர், காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பகிரவும்: