
இன்றைய (05/02/2025) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 நபர்களை காவல் துறையினர் தேடி வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தியில், “மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தோழியுடன் சேலத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், மற்றொரு தோழி சென்னை மாதவரத்தில் கணவருடன் தங்கியுள்ளார்.
கணவர் வேலைக்குச் சென்றுவிடுவதால் தோழிக்கு உதவியாக இருக்க நேற்று முன்தினம் (பிப். 03) இரவு சென்னை வந்துள்ளார். அப்போது அவர் இரவு 10 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பேருந்து வரவில்லை.
இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என விசாரித்து ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார். அந்தப் பெண் மறுக்கவே அவரையும் அவரின் உடைமைகளையும் வலுக்கட்டாயமாக ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னதாகவும் வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறியதாகவும் இதன் பிறகு அப்பெண்ணுக்கு மூவரும் பாலியல் தொல்லை அளித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
அப்பெண் உடனடியாகத் தனது தோழிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளித்துள்ளார். அவரும் காவல் கட்டுப்பட்டு அறைக்குத் தெரிவிக்கவே, ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போனை டவர் மூலம் கண்காணித்து காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர். இதையறிந்த ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணை வழியிலேயே இறக்கிவிட்டு மற்ற மூவருடன் தப்பியுள்ளார்.
இதுகுறித்த கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து மூவரையும் காவல்துறை தேடி வருகிறது. வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடும் பேருந்தில் ரீல்ஸ் எடுத்த ஓட்டுநர், நடத்துநர்
ஓடும் பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் 70வி வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பணியாளர்களான சரவணன் என்பவர் ஓட்டுநராகவும் சிவசங்கர் என்பவர் நடத்துநராகவும் பணிபுரிகின்றனர்.
சமீபத்தில் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோதே நடத்துநர் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநர் அருகே வந்துள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும் நடத்துநரையும் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தினமணி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சூனியம் வைப்பதாகக் கூறி பணம் பறித்ததாக ஒருவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பலரிடம் சூனியம் வைப்பதாகக் கூறிய 45 வயது நபர் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, “சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் எஸ். ரகு. இவர் மலைக்கோவிலை சேர்ந்த சதீஷ் பாபு என்பவரை திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் சந்தித்து, தான் ஜோதிடர் என்றும் தனக்கு சூனியம் வைப்பது தெரியும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய யூட்யூப் சேனலில் உள்ள வீடியோக்களை காட்டி, ரகுவை கோடீஸ்வரர் ஆக்குவதாகக் கூறி, அவரிடம் இருந்து ரூ. 3,000-ஐ பெற்றதாக” அச்செய்தி கூறுகிறது.
பின்னர், அருகிலுள்ள கோவிலில் சூனியம் வைத்துவிட்டு ஒரு மணிநேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற அவர் வரவில்லை எனவும், அவரை சதீஷ் தேடியபோது மற்றவர்களிடமும் இதேபோன்று பேசி ஏமாற்றியதைப் பார்த்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதை அவர் கேட்டபோது, சூனியம் வைத்து அவரைக் கொன்று விடுவதாக மிரட்டியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, “அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சதீஷ் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரகு மீது ஏமாற்றுதல், மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர்.”
பிச்சை கொடுத்தவர் மீது வழக்கு
மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பிச்சைக்காரருக்கு பிச்சை போட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
அச்செய்தியில், “இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் பிச்சை போட்டுள்ளார். இதை அறிந்த பிச்சைக்கார ஒழிப்புக் குழு, அடையாளம் தெரியாத வாகன ஓட்டி மீது பிச்சைத் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது” எனக் கூறப்பட்டுள்ளது.
“இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத முதல் இந்திய நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 மாதத்தில் 600 பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல 100 சிறுவர்களும் மீட்கப்பட்டு உள்ளனர். பிச்சை எடுப்பவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.1,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பிச்சைக்காரர் ஒழிப்புக் குழு அதிகாரி ஒருவர் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்கான செலவுகள் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு இருப்பதாக, வீரகேசரி இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
அதன்படி, அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் மருத்துவ விநியோகப் பிரிவு மூலம் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே காணக் கூடியதாக உள்ளது.
ஆகையால் திரைசேரியில் இருந்து ஒதுக்கப்படும் பணத்தை மருந்து கொள்வனவு மற்றும் சிகிச்சை சேவைகளுக்காகப் பயன்படுத்தத் திட்டமிடுவதற்குப் பதிலாக, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம்,” என்று தெரிவித்ததாக அச்செய்த்தியில் குறிப்பிட்டுள்ளது.
அதோடு, ஆரோக்கியமான தேசத்திற்கு நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட ஓர் உலகம் உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
பகிரவும்: