காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக மீண்டும் தொடங்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு – மக்கள் போராட்ட அமைப்பு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை ஆய்வறிக்கைக்கமைய முன்னெடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அதனை உடனடியாக ஆரம்பிகுமாறு வலுசக்தி அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று மக்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதலில் உள்நாட்டு மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என மக்கள் போராட்ட அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (25.09.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மணல் திட்டுக்களால் ஆன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனில் குறித்த தீர்வு தொடர்பில் ஆழமாக ஆராய்ந்தே அவற்றை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையிலேயே மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதனைச் சூழ பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. சூழல் பிரச்சினைகள் மாத்திரமின்றி மக்களுக்கு சுகாதார பாதிப்புக்களும் ஏற்பட்டன. இதனால் அங்கு வாழும் மக்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு 30 நாட்கள் கால அவகாசமும் கோரப்பட்டது. அதற்கமைய ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டு தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆய்வறிக்கையை ஆராய்ந்து ஒரு வாரத்துக்குள் தீர்வு வழங்குவதாகக் கூறப்பட்டது.
ஆனால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 22ஆம் திகதி வலுசக்தி அமைச்சிற்கு உடனடியாக இந்த திட்டத்தை ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக பொது வெளிகளில் வாக்குறுதியளிக்கும் ஜனாதிபதி உள்நாட்டுக்கும் இவ்வாறு அராஜகமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே துரிதமாக இந்த வேலைத்திட்டத்தை நிறுத்தி மன்னார் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.