தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்கள் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை – புதுடில்லி இடையே பிரத்யேக பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை

தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த, கடந்த 2020ம் ஆண்டுக்கு பின், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், சரக்கு ரயில்கள் தாமதம் இன்றி செல்ல, பிரத்யேக பாதைகள் இல்லை. சரக்கு ரயில்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், பிரத்யேக பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகளை, தெற்கு ரயில்வே துவங்கி உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:


மத்திய அரசின், ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ், ரயில்வேயில் முக்கிய நகரங்கள், துறைமுகங்களுக்கு ரயில் இணைப்பு வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், மன்னார்குடி, சிதம்பரம், கடலுார் , பேரளம், சீர்காழி, நாகப்பட்டினம், நீடாமங்கலம் உட்பட, 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரக்குகளை கையாளுவதற்கான மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும், பிரத்யேக ரயில் பாதை இல்லாததால், சரக்குகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை கோட்டத்தில், அதிகளவில் பொருட்களை கொண்டு செல்ல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

எனவே, சரக்குகளை கொண்டு செல்வதற்கு, சில வழித்தடங்களில் தனி பாதைகள் தேவைப்படுகின்றன. அதன்படி, சென்னையில் இருந்து புதுடில்லிக்கு சரக்குகளை தனி வழியில் கொண்டு செல்வதற்கான பிரத்யேக பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட ஆய்வுகள் துவங்கி நடந்து வருகின்றன.
– இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *