
பாகிஸ்தானில் ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது.
கராச்சி நகரில் நேஷனல் பேங்க் ஏரினா மைதானத்தில் இன்று பகலிரவாக நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு, பலமான வேகப்பந்துவீச்சு, குறிப்பிட்ட சில பேட்டர்களின் ஃபார்ம் ஆகியவற்றை நம்பி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது
25 ஆண்டுகள் தாகம்
29ஆண்டுகளுக்குப்பின் உலக அணிகள் விளையாடும் கிரிக்கெட் தொடர் என்பதால், அந்நாட்டு ரசிகர்களோடு சேர்ந்து பாகிஸ்தான் அணியினரும் தீவிரமாகத் தயாராகியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி களமிறங்குகிறது.
அதேசமயம், 2000ம் ஆண்டுக்குப்பின் நியூசிலாந்து அணியால் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட எந்த போட்டித்தொடரிலும் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அந்த அணி ஒரு பட்டம் கூட வெல்லாமல் கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இருக்கும் இரு அணிகளும், இன்று முதல் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் இரு அணிகளுமே முதல் போட்டியில் மோதுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலுவான வேகப்பந்துவீச்சை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணியும், 8-வது வீரர் வரை பேட்டரை வைத்திருக்கும் நியூசிலாந்து அணியும் களத்தில் மோதும்போது அனல் பறக்கும்.
இதுவரை நடந்தவை
பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 61 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 53 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியைப் பொருத்தவரை பாகிஸ்தானுடன் 3 முறை மோதியுள்ள நியூசிலாந்து அணி அனைத்திலும் வென்றுள்ளது.
இன்று போட்டி நடக்கும் கராச்சி மைதானத்தில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் 9 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 4 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்து 31 முறையும், சேஸிங் செய்து 30 முறையும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து நியூசிலாந்து அணி 26 முறையும், சேஸிங் செய்து 27 முறையும் வென்றுள்ளது.
மிரட்டும் வேகப்பந்துவீச்சு
இந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்துவீச்சாளர்கள்தான்.
ஷாகின் ஷா அப்ரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன் ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களும் நிச்சயமாக நியூசிலாந்து அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். குறிப்பாக தொடக்கத்தில் ஷாகீன் அப்ரிதியும், நடுப்பகுதியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராப் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும்.
குறிப்பாக அப்ரிதி 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியில் முன்னணி பந்தவீச்சாளராகத் திகழ்கிறார்.
2023 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்குப்பின் பாகிஸ்தான் அணி உயிர்த்தெழுந்து விளையாடி வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் நியூசிலாந்திடம் தோற்றிருந்தாலும், பாகி்ஸ்தானின் பேட்டர்கள் ஃபார்முக்கு வருவதற்கு அந்தத் தொடர் உதவியாக இருந்தது.
2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியில் விளையாடியவர்களில் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான், பகீம் அஸ்ரம் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் புதியவர்கள். முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
சுழற்பந்துவீச்சில் சக்லைன் முஸ்தாக், முஸ்தாக் அகமது போன்ற பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்தாலும், குஷ்தில் ஷா, சல்மான் அகா, கம்ரான் குலாம் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
பேட்டிங்கைப் பொருத்தவரை பாபர் ஆஸம் கடந்த 21 இன்னிங்ஸ்களாக ஒரு சதம்கூட அடிக்கவில்லை. ஆனால், முத்தரப்புத் தொடரில் சிறப்பாக ஆடி இழந்த ஃபார்மை பாபர் ஆஸம் மீட்டுள்ளார்.
ஃபக்கர் ஜமான், முகது ரிஸ்வான் மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய , நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். நடுவரிசையில் சவுத் சகீல், சல்மான் சஹாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
உள்நாட்டில் போட்டி நடப்பது, ரசிகர்களின் ஆதரவு, கராச்சி மைதானத்தில் அதிகமாக விளையாடிய அனுபவம் ஆகியவை பாகிஸ்தானுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
வலுவான பேட்டிங் வரிசை
நியூசிலாந்துக்கும், பாகிஸ்தானுக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. 2000ம் ஆண்டில் நியூசிலாந்து அணியும், 2017ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திதான் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின.
நியூசிலாந்து அணிக்கு இந்தத் தொடர் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கி பெர்குஷன், பென் சீர்ஸ் இருவரும் காயத்தால் விலகியது பின்னடைவுதான். பெர்குஷனுக்குப் பதிலாக ஜேமிஸன் சேர்க்கப்பட்டாலும் கராச்சிக்கு அவர் இன்னும் வராததால் முதல் போட்டியில் ஜேமிஸன் பங்கேற்கமாட்டார்.
முத்தரப்புத் தொடரில் கேட்ச் பிடிக்கும்போது தலையில் பந்துபட்டு காயமடைந்து, தேறிவரும் ரச்சின் ரவீந்திராவும் முதல் ஆட்டத்தில் விளையாடாதது நியூசிலாந்துக்கு பின்னடைவுதான்.
இருப்பினும் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வலுவாக இருப்பதால், பாகிஸ்தான் எச்சரிக்கையுடனே அணுக வேண்டியதிருக்கும்.
இதனால் டேவன் கான்வேயுடன் சேர்ந்து வில் யங் ஆட்டத்தைத் தொடங்குவார். மற்றவகையில் நியூசிலாந்து அணி வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது.
கேன் வில்லியம்ஸன், டேரல் மிட்ஷெல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், பிரேஸ்வெல், சான்ட்னர் வரை பேட்டர்கள் உள்ளதால், கடைசிவரை போராடக்கூடிய பேட்டிங் வரிசை இருப்பது பாகிஸ்தானுக்கு பெரிய தலைவலியாக மாறும். முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் சான்ட்னர், பிரேஸ்வெல் ஆகியர் மட்டுமே இருக்கிறார்கள். சமீபத்தில் முடிந்த முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சுழற்பந்தவீச்சாளர்கள் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் வழங்கிய நிலையில் நியூசிலாந்தின் சான்ட்னர், பிரேஸ்வெல் 4 ரன்களுக்குள்தான் விட்டுக்கொடுத்து பந்துவீசினர். ஆதலால், இருவரின் பந்துவீச்சும் நடுப்பகுதி ஓவர்களில் பாகிஸ்தானுக்கு சவாலாக இருக்கும்.
பகுதிநேரப் பந்துவீச்சில் டேரல் மிட்ஷெல், பிலிப்ஸ் இருப்பது பலம். பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது நியூசிலாந்து அணியின் டிரன்ட் போல்ட், சவுத்தி, பெர்குஷன் இல்லாதது பலவீனமாக இருந்தாலும், மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில் ரூர்கே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் கரைகடக்க வேண்டும். மற்றவகையில் வலுவானபேட்டர்களை நம்பிதான் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி.
ஆடுகளம் எப்படி
கராச்சி ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, பந்து பேட்டரை நோக்கி நன்கு எழும்பி வரும் என்பதால் அடித்து ஆடலாம். சமீபத்தில் முத்தரப்புத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 352 ரன்கள் குவித்தது.
இந்த மைதானத்தில் ஓவருக்கு சராசரியாக 5.90 ரன்கள்வரை பேட்டரால் சேர்க்க முடியும், ஒரு அணி சராசரியாக 230 முதல் 250 ரன்கள் வரை அடிக்க முடியும் அதை எளிதாகவும் சேஸிங் செய்யலாம் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் அடிப்பது பாதுகாப்பானது.
அணிகள் விவரம்
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான்(கேப்டன்), பாபர் ஆஸம், ஃபக்கர் ஜமான், கம்ரான் குலாம், சவுத் சகீல், தயாப் தகிர், பஹீம் அஷ்ரப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா, உஸ்மான் காந், அப்ரார் அகமது, ஹரிஸ் ராப், முகமது ஹஸ்னன், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி
நியூசிலாந்து
மிட்ஷெல் சான்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரல் மிட்ஷெல், வில் ரூர்கோ, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்ஸன், வில் யங், ஜேக்கப் டபி
பகிரவும்: