போரினால் பாதிக்கப்பட்ட காசாவின் மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த 171 சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் நாடு கடத்தியது.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 42 படகுகளில், சுமார் 500 செயற்பாட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் படகுகள், பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். அவர்கள் அனைவரையும் இஸ்ரேலியப் படையினர் சிறைப்பிடித்தனர்.

பல ஆர்வலர்கள், இஸ்ரேல் படைகளால் தடுப்புக் காவலில் கொடுமை படுத்தப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கிரெட்டாவை இஸ்ரேலியப் படைகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்தமிடுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பொய்க் குற்றச்சாட்டு என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 171 ஆர்வலர்கள் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *