டென்மார்க்கில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் பன்னிரு வேங்கைகள் நினைவு நாளும்

1987 ஒக்ரோபர் 10ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீதான தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி வித்தாகி வீழ்ந்தார். அவர் தனது எம்16 ரக துப்பாக்கியால் குண்டுகளைச் சீறிப்பாயச் செய்து நடத்திய அந்தத் தாக்குதல் அவரது இறுதித் தாக்குதல் ஆகும். தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்த இந்த நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பு 1985 ஆகஸ்ட் 18 அன்று தொடங்கப்பட்டு, எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலை எடுத்தியம்பக் காரணமாக அமைந்ததன் 40 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025 ஆகிய நிகழ்வுகள் அனைத்துலக ரீதியில் உணர்வெழுச்சியுடன் இன்று கொண்டாடப்படுகின்றன.
இந்தச் சிறப்பான நிலையில், டென்மார்க்கில் இன்றைய நிகழ்வின் சிறப்பு வெளியீடாக, அனைத்துலகத் தொடர்பகத்தின் மகளிர் அமைப்பினரால் ‘சூரியப்புதல்விகள் பாகம் இரண்டு’ பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது.
மேலும், இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட மாவீரர்களின் நினைவும் இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.