முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கட்சியான பி.என்.பி. வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் ராணுவத்துடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

டாக்கா

வங்கதேசத்தில், கடந்த 1971ம் ஆண்டு நடந்த அந்நாட்டு விடுதலை போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு இரண்டு தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இப்போராட்டம் மக்கள் எழுச்சியாக மாறியது.

தொடர் போராட்டம் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் 5ல், பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

கடந்த ஆட்சியின் போது, அரசியல் எதிரிகளை, கடத்துதல், சித்தரவதை செய்தல், ஆட்களை கட்டாயமாக காணாமல் ஆக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், 16 ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட, 14 பேருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.

இதில், 16 ராணுவ அதிகாரிகளில் 15 பேர் ராணுவ காவலில் வைக்கப்பட்டனர். ஒருவர் தலைமறைவானார்.

கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் சிவில் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்களா அல்லது ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்களா என்பதில் கருத்து வேறுபாடும், பதற்றமும் நிலவியது.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான பி.என்.பி., எனப்படும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி, இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுசுக்கு, ராணுவத்துடன் நல்லுறவை பேணி பராமரிக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது:

ராணுவத்தை பகைத்துக் கொள்வது நாட்டில் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நாடு எந்த ஒரு ஆபத்தையும் தாங்காது. ஆகையால், அரசு சமநிலையுடன் இருக்கவேண்டும். ராணுவத்துக்கும், இடைக்கால அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், வீழ்த்தப்பட்ட சர்வாதிகாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் குழப்பத்தை உருவாக்கி அனுகூலம் தேடலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

வீழ்த்தப்பட்ட சர்வாதிகாரிகள் என ஷேக் ஹசினாவையும், ஆதரவாளர்கள் என அவரது கட்சியினரையும் சுட்டிக்காட்டியுள்ளது-. இந்த எச்சரிக்கை, அரசியல் கட்சிகளுடன் யூனுஸ் நடத்திய அவசர கூட்டத்தின் போது, பி.என்.பி.,யின் நிலைக்குழு உறுப்பினரான சலாவுதீன் அகமதுவால் விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *