
07.03.2025 – சென்னை
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு த.வெ.க., சார்பில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் பங்கேற்க கட்சியின் சார்பில் அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறப்பதற்காக நடிகர் விஜய் இன்று (மார்ச் 7) மாலை 5.20 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ., அரங்கம் வந்தார். காரில் இருந்து இறங்கும் போது, இஸ்லாமியர்கள் போன்று, கைலி, சட்டை மற்றும் குல்லா அணிந்து காட்சி அளித்தார். ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்த படியே அவர் அரங்கின் உள்ளே சென்றார்.
பின்னர், அரங்கினுள் சென்ற அவர், நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் இஸ்லாமியர்களுடன் வரிசையில் அமர்ந்தார். தொழுகை செய்துவிட்டு நோன்பு கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு இப்தார் நோன்பு திறந்தார்.
நோன்பு திறந்த பின்னர், த.வெ.க., சார்பில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக, நோன்பு நிகழ்வில் கலந்து கொள்ள கட்சியின் சார்பில் பங்கேற்பவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்கள் விஜயை பார்க்க ஆர்வத்துடன் அரங்கினுள் முண்டியடித்துச்சென்றனர். இதனால் அரங்கின் நுழைவு வாயிலில் இருந்த பெரிய கண்ணாடி உடைந்து சிதறியது.
பகிரவும்: