‘டி-20’ உலக சாம்பியனான இந்திய அணி அசுர பலத்துடன் உள்ளது. துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா துவக்கம் தரலாம். அடுத்து திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் வருவர். பின் ‘ஆல்-ரவுண்டர்கள்’ ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே களமிறங்குவர்.

‘டாப்-3’ வரிசையில் கீப்பர்-பேட்டர் சாம்சன் வர இயலாததால், வாய்ப்பு கிடைப்பது கடினம். 7வது இடத்தில் கீப்பராக ஜிதேஷ் சர்மா இடம் பெறலாம். 8வது இடத்தில் அக்சர் படேல் களமிறங்குவார். பந்துவீச்சில் பும்ரா மிரட்டலாம். துபாய் ஆடுகளம் முன்பு சுழற்பந்துவீச்சிற்கு அதிகம் ஒத்துழைத்தது. இதனால் இங்கு நடந்த சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடரில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், வருண் சக்ரவர்த்தி என நான்கு ‘ஸ்பின்னர்’கள் களமிறக்கப்பட்டனர். தற்போதைய புதிய ஆடுகளம் பேட்டிங், பவுலிங்கிற்கு ஒத்துழைக்கலாம். அக்சர் படேல் உடன் கூடுதலாக ஒரு ‘ஸ்பின்னர்’ சேர்க்கப்படலாம். வருண் அல்லது குல்தீப் வாய்ப்பு பெறலாம்.
பலம்குன்றிய எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது வசீம், ராகுல் சோப்ரா, ‘ஸ்பின்னர்’ சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரர்களுக்கு இந்தியாவுடன் விளையாடும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 2007ல் இந்திய அணி ‘டி-20’ உலக கோப்பை வென்ற போது மானேஜராக இருந்த லால்சந்த் ராஜ்புட், தற்போது எமிரேட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது பலம். இவர் கூறுகையில்,”ஆசிய கோப்பை தொடரை எதிர்கொள்ள எமிரேட்ஸ் அணி தயாராக உள்ளது. பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிப்பது கடினம்,”என்றார்.
எமிரேட்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய வம்சாவளி வீரர் சிம்ரன்ஜீத் சிங் 35, கூறுகையில்,”நானும் சுப்மனும் பஞ்சாப், மொகாலி மைதானத்தில் காலை 6-11 மணி வரை ஒன்றாக பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். அப்போது சுப்மனுக்கு 12 வயது இருக்கும். அவருக்கு நீண்ட நேரம் பந்துவீசியுள்ளேன். இப்போது என்னை அடையாளம் தெரியுமா என தெரியவில்லை,”என்றார்.
சர்வதேச ‘டி-20’ அரங்கில் இரு அணிகளும் ஒரு முறை மோதின. 9 ஆண்டுகளுக்கு முன், 2016ல் மிர்புரில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் எமிரேட்ஸ் அணியை (20 ஓவர், 81/9), இந்தியா (10.1 ஓவர், 82/1) 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
* துபாய் ஆடுகளம் இம்முறை வேகங்களுக்கும் கைகொடுக்கலாம்.
* வெப்பமான வானிலை காணப்படும்.