ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.
ஹீதர் நைட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.
அத்துடன் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்டுடன் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் ஹீதர் நைட் இட்டார்.நைட்டை விட அமி ஜோன்ஸ் 56 ஓட்டங்களையும் நெட் சிவர் – ப்றன்ட் 38 ஓட்டங்களையும் டமி போமன்ட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்படும்.
இந்தியா வெற்றிபெற்றால் இரண்டு அணிகளும் அடுத்த போட்டிகளின் முடிவு வரை காத்திருக்க வேண்டிவரும்.
இந்தியா இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுவிட்டன.