09.03.2025 – திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை சுட்டு சமைத்து சாப்பிட்ட தொழிலாளி உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் வீர சின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம் 33. இவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இதில் சில தினங்களாக குரங்குகள் புகுந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாசம் செய்தது. இதனால் ராஜாராம், தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை சந்தித்து குரங்குகளை கொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் ராஜாராம் ரூ.1000 பணம் கொடுத்து தன் தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்ல வேண்டும் என டீல் பேசியுள்ளார். சம்மதித்த ஜெயமணி, தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் குரங்கை சுட்டு கொன்றார். பின்னர் சமைத்து சாப்பிட்டனர்.
இதை அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறையினர் வடுகபட்டி பகுதியில் உள்ள ஜெமணியை, பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ராஜாராம், பணம் கொடுத்து ஜெயமணியிடம் குரங்குகளை கொல்ல கூறியது தெரிந்தது. வனத்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.