இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ விமானம் திடீரென ரத்து

ரோம்

இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தீபாவளி விடுமுறைக்கு நாடு திரும்ப முடியாமல் ஏராளமான பயணியர் சிக்கிக் கொண்டனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லி வர, ‘ஏர் இந்தியா’வுக்கு சொந்தமான ஏ.ஐ., 138 என்ற விமானத்தில் ஏராளமான இந்தியர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.

தீபாவளி விடுமுறைக்கு நாடு திரும்பும் வகையில், நேற்று முன்தினம் புறப்படும் விமானத்தில் பயணிக்க அவர்கள் தயாராக இருந்தனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது.

மாற்று விமானம் தயாராக இல்லாததால், முன்பதிவு செய்த பயணியர் அனைவரும் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தடுத்து புறப்படும் விமானங்களில் ‘சீட்’ இல்லாததால், மாற்று பயணத்துக்கு திட்டமிட்டவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனால், தீபாவளி பண்டிகைக்கு அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது. ஒரு சில பயணியருக்கு, இன்று புறப்படும் விமானங்களில் டிக்கெட் கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊர் திரும்ப டிக்கெட் எடுத்திருந்த நிலையில், விமானம் திடீரென ரத்து செய்யப்பட் டதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில், ஏர் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும், விமர்சனத்தையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *