பட்டாசு புகையால் தில்லி திணறுகிறது!

புதுடில்லி

தீபாவளியை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் இரவு பட்டாசுகள் வெடித்ததால், மாசு அதிகரித்து காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது. பெரும்பாலான மாசு கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிக அபாயஅளவை எட்டியது.

தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டாசுகள் வெடிப்பதற்கான தடையை உச்ச நீதிமன்றம் தளர்த்தி இருந்தது. மேலும், பசுமை பட்டாசுகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது.

மோசமான நிலை இதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள மக்கள், தீபாவளி நாளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகளால், ஏற்கனவே டில்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நிலையில், பட்டாசு புகையும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கியது.

இதன் காரணமாக காற்றின் தரக்குறியீடு, 359 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. இதனால், பெரும்பாலான மக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல், தொண்டை வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காஜியாபாதில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பாகவே, தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காற்றின் தரம் மாசு அடைந்திருந்த நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றில் நச்சுப்புகை கலந்தது.

எதிர்பார்ப்பு காற்றின் தரக்குறியீடு, 0 – 50 வரை இருந்தால் நன்று என கூறப்படுகிறது. இந்த அளவு, 51 முதல் 100க்குள் இருந்தால் திருப்தி என வரையறுக்கப்படுகிறது. 101 முதல் 200 ஆக பதிவானால் மிதமான மாசு என்றும், 201 முதல் 300க்குள் இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.

இதுவே 301 முதல் 500க்குள் பதிவானால் மிக மோசம் என்றும், 401 முதல் 500 எனில் அபாயகரமானது எனவும் கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில், தீபாவளிக்குப் பின் டில்லியின் துவாரகா – – 417, அசோக் விஹார் – 404, வஸிர்பூர் – – 423 மற்றும் ஆனந்த் விஹார் – 404 ஆகிய நான்கு இடங்களில் காற்றின் தரக்குறியீடு அபாயகரம் என்ற அளவில் பதிவாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாசுகள் வெடிப்பது குறைந்திருப்பதால், காற்றின் தரம் அடுத்த ஓரிரு நாட்களில் சீராகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *