
10.03.2025 – கொழும்பு
பௌத்த சமயக் கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆவது பிரிவுகளில் திருத்தங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் புதிதாக நியமிக்கப்பட்ட மகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகா நாயக்க தேரருக்கு ‘ஸ்ரீ சன்னஸ் பத்திரம்’ வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பௌத்த சமயக் கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆவது பிரிவுகளில் திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவை அங்கீகரிக்கப்பட்டதும், சங்க சபையின் முறையான ஸ்தாபனத்தை உறுதி செய்து சட்டமாக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பௌத்த கலந்துரையாடல் சட்டம் தொடர்பாகவும் மகாநாயக்க தேரர்களுடன் தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திஸாநாயக்க, ஒழுக்க ரீதியில் நேர்மையான தேசத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், இந்த நாட்டின் மகா சங்கத்தினரும் சமய நிறுவனங்களும் ஈடுசெய்ய முடியாத மற்றும் ஆழமான பொறுப்பை சுமப்பதாக தெரிவித்தார்.
எவ்வளவோ பொருளாதார மற்றும் அரசியல் வெற்றிகளைப் பெற்றாலும், நீதியான நல்லொழுக்கமுள்ள சமூகம் அமைக்கப்படாவிட்டால் அவை அர்த்தமற்றதாகி விடும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
தேசத்தின் உடைந்த சமூகத்தை மீளமைக்க சட்டத்தின் ஊடாக மாத்திரம் சாதிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கருணையுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
புத்தர் மற்றும் பிற மதத் தலைவர்களால் பிரசங்கிக்கப்பட்ட விடுதலையின் சாராம்சம் குறித்த வலுவான தேசிய உரையாடல் நாட்டின் குடிமக்களின் நல்வாழ்வுக்காக அவசரமாக தேவைப்படுவதாக அவர் மேலும் கூறினார். மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கும் சங்க சபைக்கும் தேவையான அதிகாரங்களை வழங்குதல்.
ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் புதிதாக நியமிக்கப்பட்ட மகாநாயக்க தேரருக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் ‘ஸ்ரீ சன்னஸ் பத்திரம்’ வழங்கப்பட்டது.
பகிரவும்: