கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று புதன்கிழமை (10.09.2025) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 இரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் தொடர் போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேபாளத்தின் அனைத்து விமான நிலையங்களையும் நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.