
12.03.2025 – பெய்ஜிங்
‘டீப்சீக்’ என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே, அதைவிட மேம்பட்ட ‘மானஸ்’ ஏ.ஐ., மாடலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது.
கூகுள் ஏ.ஐ., ஓப்பன் ஏ.ஐ., ஆகியவை பிரபலமாகி வந்த நிலையில், அமெரிக்க கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாக, டீப்சீக் என்ற ஏ.ஐ., மாடலை சீனா அண்மையில் அறிமுகம் செய்தது.
பங்குகள் நிலவரம்
டீப்சீக் ஏ.ஐ., பதிவிறக்கம் அதிகரித்ததால், ஓப்பன் ஏ.ஐ., பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், ‘மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட்’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாடலை, சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது.
மற்ற எல்லா ஏ.ஐ., மாடல்களையும் விட நவீனமாக, நிஜ உலகின் சவால்களை யோசிப்பது, திட்டமிடுவது, தானே செயல்படுத்துவது என அனைத்தையும் மானஸ் செய்து விடுகிறது.
இணையதளங்களை உருவாக்குவது, பயணங்களை திட்டமிடுவது, பங்குகள் நிலவரத்தை ஆராய்ந்து முதலீட்டுக்கு உதவுவது உட்பட, இந்த ஏ.ஐ., மாடல் செய்யக்கூடிய செயல்கள் ஏராளம் என்கிறது, இதை வடிவமைத்துள்ள சீன ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘மோனிகா!’
வழக்கமான ஏ.ஐ., சாட்பாட்கள், நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும். ஆனால், மானஸ் ஏ.ஐ., வசம் ஒரு பணியை கொடுத்தால், அதன் பின் நம்மை சாராமல், அதுவே முழுதுமாக முடித்து கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டது.
உதாரணமாக, காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தேவை என கேட்டால், அதுவே ஆராய்ச்சி செய்து, அறிக்கை தயாரித்து, அட்டவணைகளை உருவாக்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, இறுதி ஆவணமாக கொடுத்து விடும்.
மோனிகா நிறுவனம் வெளியிட்ட அறிமுக வீடியோவில், இணையதளத்தில் மானஸ் ஏ.ஐ., கலந்துரையாடுவது, தகவல்களை சேகரிப்பது, சிக்கலான உத்தரவுகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது ஆகியவை இடம்பெற்றன.
புதிய புரட்சி
இணையதளத்தை பிரவுசிங் செய்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்து, ஆன்லைன் பணிகளை பதிவு செய்து, அறிக்கை தயாரித்து, பவர் பாயின்ட் விளக்கமாக மானஸ் வழங்கியது. இது, ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய புரட்சி என கருதப்படுகிறது.
ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் திரையில் மானஸ் காட்டி விடும்.
அதாவது, மளிகை கடைக்கு போன் போட்டு, அரிசி மூட்டை வந்திருக்கிறதா என சிங்கம் படத்தில் நடிகர் விவேக் விசாரிப்பதையும், நடிகர் சூர்யா விசாரிப்பதையும் இதனுடன் ஒப்பிடலாம்.
எப்படி பயன்படுத்துவது?
சாட்ஜி.பி.டி., உட்பட மற்ற ஏ.ஐ., சாட்பாட்களை போலவே திரையில் மானஸ் தயாராக இருக்கும். கோவாவுக்கு நான்கு நாள் சுற்றுலாவை சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கவும் என உள்ளிட்டால் போதும்; உடனே, தன் ஆராய்ச்சியை துவங்கி, தரவுகளை சேகரித்து, முழு அறிக்கையை திரையில் காட்டி விடும். புறப்படும் இடம் முதல், வரைபடங்கள், இணைய தொடர்பு முகவரிகள், பயண அறிவுரைகள் என எல்லாமே அந்த அறிக்கையில் இருக்கும். பணியை துவங்கிய பின், இணைப்பை துண்டித்து விட்டாலும், நினைவகத்தில் தன் சவாலை வைத்து, பின்னணியில் மானஸ் செயல்படும். மீண்டும் இணையதள தொடர்பு ஏற்பட்டதும், திரையில் பயண அறிக்கை ரெடியாக ஒளிரும்!
எங்கு கிடைக்கிறது?
மானஸ் ஏ.ஐ., தயாரிப்பாளரான சீனாவின் மோனிகா ஸ்டார்ட்அப், தற்போது பிரீவியூவாக மட்டுமே மானஸை வெளியிட்டுள்ளது; இன்னும் பொது பயன்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மானஸ் வெளியானதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றங்களைஏற்படுத்தக்கூடும்.
பகிரவும்: