
12.03.2025 – திருச்செந்தூர்
திருச்செந்தூர், தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர்.
நேற்று இரவு குமரவிடங்கபெருமான் சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காலை 7 மணிக்கு விநாயகர் தனித்தேரிலும், குமரவிடங்கபெருமான் சுவாமி, வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் பெரிய தேரிலும், தெய்வானை அம்பாள் தனித்தேரிலும் தனித்தேரிலும் எழுந்தருளினர்.
“முருகனுக்கு அரோகரா… கந்தனுக்கு அரோகரா… வேலனுக்கு அரோகரா” என்ற கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
பகிரவும்: