
13.02.2025 – மதுரை
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதி நிலங்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், போலி பட்டா மூலம் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலங்களை போலி பட்டா மூலம் அபகரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் ஸ்டேஷன் என அடுத்தடுத்து அமைவதால் திருமங்கலம், கப்பலுார், தோப்பூர் பகுதி நிலங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தோப்பூர், கரடிக்கல், உரப்பனுார் பகுதிகளில் பொதுமக்கள் முதலீடாக வாங்கி கண்காணிக்காமல் வைத்திருக்கும் நிலங்களை போலி பட்டா, போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தங்கம் 75. முன்னாள் ராணுவவீரரான இவர், 2014ல் சந்தோஷ்நகர், கோல்டன் சிட்டியில் 22 சென்ட் மதிப்புள்ள 3 பிளாட்டுகளை கிரையம் செய்து பட்டா பெற்றார். இவரது நிலத்திற்கு திருமங்கலம் பஞ்சாச்சரம் என்பவர் பட்டா தயாரித்து விற்றதாக நீதிமன்றத்தில் தங்கம் தொடர்ந்த வழக்கில் 6 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாச்சரம் தயாரித்த பட்டா அடிப்படையில் பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக திருமங்கலம் சார்பதிவாளர் பாண்டியராஜன் மீது குற்றம்சாட்டியுள்ள தங்கம், லஞ்சஒழிப்பு போலீசிலும், பத்திரப்பதிவு ஐ.ஜி., தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடமும் புகார் அளித்துள்ளார்.
அதில், மோசடி பட்டாவை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டர், டி.ஆர்.ஓ.,வுக்கு உத்தரவிட்டது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள போது எவ்வித பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என ஆர்.டி.ஓ., மூலம் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனாலும் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி. இதற்கு உடந்தையாக இருந்த சார்பதிவாளர் பாண்டியராஜன், பத்திர எழுத்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கிழவநேரியில் நிலம் வாங்கிய ஒருவருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாண்டியராஜன் கைதானது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்: