
14.03.2025 – சென்னை
₹1,000 கோடிக்கு மேல் முறைகேடு டாஸ்மாக் பற்றி பகீர் ரிப்போர்ட் ED வெளியிட்ட ஊழல் பட்டியல் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுதும் கடந்த 6ம் தேதி முதல் 3 நாட்களாக அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடந்தது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலேயே நடந்த இந்த சோதனை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுவிலக்கு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி ஜாமீனில் உள்ள அவரது அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது பரபரப்பை கிளப்பியது. இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ரெய்டு தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை இப்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது அம்பலமாகியுள்ளது. மது விற்பனைக்காக டாஸ்மாக் ஊழியர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் எண்ணிக்கையை குறைத்து காட்டி ஊழல் நடந்துள்ளது. பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் – மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, கட்டட உட்கட்டமைப்பிலும் ஊழல் நடந்துள்ளது.
இந்த முறைகேடுகள் மூலம் டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் புழங்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரனை நடக்கிறது. சந்தேகிக்கப்படும் மூத்த அதிகாரிகளுக்கு விரைவில் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
பகிரவும்: