
14.02.2025 – மாலே
மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரம் காரணமாக அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.
அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இன்னும் ஒரு மாத அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே கையிருப்பில் அந்நிய செலாவணி அந்நாட்டு அரசின் கருவூலத்தில் உள்ளது.
வேறு வழியில்லாத சூழலில், இந்தியாவிடம் இறங்கி வந்து உதவி கேட்கும் நிலைக்கு மாலத்தீவு அரசு தள்ளப்பட்டது. இந்திய அரசும் மாலத்தீவிற்கு சில உதவிகளை வழங்கியது.தற்போது, இலங்கையைப் போல மாலத்தீவு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. இதனால் மாலத்தீவுக்கு, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சர்வதேச கடன் வழங்குபவர்கள் கூடுதல் உதவி வழங்க தவிர்க்கின்றனர்.
அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை, இந்தியாவில் இருந்து 750 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதவிகள் கிடைத்தாலும் அவர்களுக்கு தற்போது இருக்கும் கடனை அடைக்க போதுமானதாக இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகள் எடுத்தும், மாலத்தீவின் அந்நிய செலவாணி கையிருப்பு மிகக்குறைவாக உள்ளது.தற்போது நிலவரப்படி, கடனில், 3.4 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனாகும். குறிப்பாக சீனா அதிக கடன்களை வழங்கி உள்ளது. கடன் பிரச்னையை சமாளிக்க, அதிபர் முய்சு, அமைச்சர்களை வளைகுடா நாட்டிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அந்த நாடுகள் இதுவரை உதவிகள் செய்ய முன்வராமல் கை விரித்து விட்டனர்.வரும் 2029ம் ஆண்டிற்குள் 11 பில்லியன் டாலர்களாக கடன் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் வரும் ஆண்டுகளில் மாலத்தீவு திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
புதிய வரிகள்
ஜி.எஸ்.டி.,யை 16% லிருந்து 17% ஆக உயர்த்தியும் , சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரித்தும், சுற்றுலா துறையில் புதிய வரிகளை விதித்தும் மாலத்தீவு அரசு வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறது.
பகிரவும்: